சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு பொருந்துமா?
ஒன்பதாம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான, அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை, சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும், தனித் தேர்வர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
கொரோனாவால், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காததால், மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' செய்யப்படுவதாக, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை, தனி தேர்வர்களுக்கும், மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, கோவை ஒரு பள்ளி தலைமையாசிரியர் கூறியதாவது: கடந்தாண்டு தொற்று காலத்திலும், மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்கள், தேர்வெழுத வலியுறுத்தப்பட்டது. இந்த ஆண்டும் அரசு, அனைவரும் தேர்ச்சி என அறிவித்தாலும், சிறப்பு குழந்தைகளுக்கு அமல்படுத்துவது குறித்து குறிப்பிடப்படவில்லை.
ஆண்டு முழுதும் படித்தாலும், இத்தகைய மாணவர்கள், அடுத்த பொதுத்தேர்வு வரை, பாடங்களை நினைவில் வைத்து எழுதுவது, சிரமமாக இருக்கும். எனவே, அவர்களுக்கும் தேர்வு இன்றி, தேர்ச்சி வழங்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களுக்கும், அனைவரும் தேர்ச்சி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.