நிகழ் காலம் சரியாக இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இறந்த காலச் சம்பவம் என்பது நடந்து முடிந்து விட்ட சம்பவமும், வாழ்ந்து முடித்த வாழ்க்கையாகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிகழ்கால சம்பவம் என்பது இப்போது நடந்து கொண்டிருக்கிற வாழ்க்கையாகும். எதிர்கால சம்பவம் என்பதும் எதிர்கால வாழ்க்கை என்பதும் இனிமேல்தான் நடக்கவிருக்கிற வாழ்க்கையாகும். இந்த நிகழ்கால வாழ்க்கையின் தொகுப்புகள்தான் அவரவர்க்குரிய எதிர்கால வாழ்க்கையை அமைக்கப் போகிறது. ஆக மொத்தத்தில் எல்லாம் காலத்தின் விதியே. அப்படியென்றால் அந்தக் காலத்தோடு அந்தக் காலத்திற்கேற்ற காலத்தை உருவாக்குவதே மனிதன்தான்.
அப்படியென்றால் எல்லாமே மனித விதிதான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடைபெறுகிற சம்பவங்களுக்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் அவர்தான் காரணமேயன்றி இறைவன் அல்ல. இதில் இரவும் பகலும் இறைவன் இயற்கை விதிப்படி நடக்கிறது. அப்போதுதான் ஒவ்வொரு நாளும் புது நாளாக வந்து போகும். இது கால ஓட்டத்தின் விதி. காலம் எனக்கு என்ன செய்தது என்பதைவிட, காலவோட்டத்தோடு எப்படி கார்யம் செய்து கொண்டிருக்கிறேன், இருக்கின்ற நிகழ்காலத்தோடு எப்படி என் நிகழ் கால வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறேன் என்பது மிக முக்கியம்
இன்று பெரும்பாலானோர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டும் போராடிக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலம் பற்றிய பயத்தோடும் வேதனைகளையும் நிகழ்காலத்தில் சுமந்து நிகழ்கால வாழ்க்கையை கோட்டை விடுகிறார்கள் . கோட்டை விடுவதோடு எதிர்காலத்தையும் நழுவ விடுகிறார்கள். நிகழ்காலம் என்பது கடந்த காலமாகிய இறந்த காலத்தின் மொத்தத் தொகுப்பு.
அடுத்து எதிர்காலம் என்பது நிகழ்கால திறக்கும் கூட்டப்படுகின்றதொரு கூட்டு. இந்த தொகுப்புக்கும், கூட்டுக்கும் முக்கிய காரணமான நிகழ்காலம்தான் முக்கியம். காரணம் மனிதன் கடந்த காலத்திலும் அல்ல, எதிர்காலத்திலும் அல்ல, நிகழ்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நிகழ்காலத்தை இழந்துவிட்டால் அது திரும்ப கிடைக்கவே கிடைக்காது. நேற்று விதைத்ததைதான் (சிந்தனை) இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறது. இன்று விதைப்பது (சிந்தனை) நாளை அறுவடை செய்யப் போகிறது. ஆகவே இன்றைய நிகழ்காலத்தை முறையாக முழுமையாக வாழ வேண்டுமென்றால் கடந்த காலத் தொகுப்பையும், எதிர்காலக் கூட்டையும் மிகத் தெளிவான முறையில் நிகழ் காலத்தில் வைத்து அதிலிருந்து எடுக்க வேண்டியதை எடுத்து,சேர்க்க வேண்டியதை சேர்த்தது, கழிக்க வேண்டியதை கழித்து, கூட்ட வேண்டியதை கூட்டி, அவரவர் சிந்தனை, சொல், செயல், இவற்றை நிகழ் காலத்திற்கேற்ப பழக்கப்படுத்தி வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி வழக்கப்படுத்திச் செய்ய வேண்டியதே மனிதனே அன்றி இறைவன் அல்ல. இதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் என்றுமே இன்பம்தான்.