வகுப்பறையில் மாணவர்கள் இயல்பாக பேசட்டும், பேச்சில்தான் சுகம்!
குழந்தைகள் எல்லா இடங்களிலும் நினைத்தவற்றைப் பேசுவ தில்லை. பேசுவதற்கான முழு சுதந்திரம் வகுப்பறைகளில் இல்லை. வகுப்பறைகளைத்தான் மதிப்பெண்கள் ஆளுகின்றன என்றால், வீட்டிலாவது எண்ணியவற்றை எண்ணியவாறு எடுத்துச் சொல்ல இடம் இருக்கிறதா என்றால் அங்கும் குழந்தைகளின் குரலுக்குப் பல நேரம் கடிவாளம் போடப்படுகிறது.
மகிழ்ச்சியான தருணங்களில் துள்ளிக் குதித்து தங்களது களிப்பை வெளிப்படுத்துபவர்கள் குழந்தைகள். ஒருவேளை தோல்வியோ, மரியாதைக் குறைவான சம்பவமோ ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் குழந்தைகளுக்கு மௌனமே மொழியாகிப் போகிறது.
இப்படிப் பலவிதமான மௌனங்கள் வகுப்பறைகளில் இருந்தே தொடங்குகின்றன எனலாம். பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், கேள்விக்கு மட்டுமே பதில் கூறுகிறாரே தானாக முன்வந்து எதுவும் பேசுவதில்லையே? அருகில் இருக்கும் சக மாணவர்களோடும் மனம் விட்டுப் பழகுவதில்லையே என்று அம்மாணவரின் பெற்றோரிடம் வினவினேன்
அதற்கு மாணவரின் தாய், “எல்கேஜி வகுப்பில் ‘பேசக் கூடாது, கையைக் கட்டி வாயில் விரலை வை’ என்று அறிவுறுத்திய பழக்கம் என் மகனின் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது. 12 ஆண்டுகள் ஆகியும் அந்த பழக்கத்தை மறக்கடிக்க முடியவில்லை. அதுவே அவனது இயல்பாக மாறிப் போய்விட்டது” என்றார். இதைக் கேட்ட காதுகளும் எண்ணங்களும் அங்கேயே உறைந்துபோய் நின்றன.
மௌனங்கள் மொழியாகும்: மெல்ல கற்கும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறும்போது அந்த வகுப்பறையில் பேசத் தகுதியற்ற ஒருவராக ஆளாக்கப்படுகிறார். தன்னால் ஏன் இயலவில்லை அல்லது முடியாமல் போனதற்கான காரணம் தான் என்ன என்பதை எடுத்துச் சொல்லக்கூட அவர் விரும்புவதில்லை என்று கூறலாம்.
அதனால் அந்த மாணவர் மெளனத்தில் ஆழ்ந்துவிடக் கூடும். ஆனால், அவரது மெளனத்தை விளங்கிக் கொள்ளாமல் அந்த மாணவர் பிடிவாதம் பிடித்தவர் என்றும், நெஞ்சழுத்தக்காரர் என்றும் முத்திரைகள் இடுகிறோம். இதனால் சம்மந்தப்பட்ட மாணவரை மென்மேலும் காயப்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.
மாணவரின் மௌனம் பரிசீலனைக்கு உள்படுத்த வேண்டிய ஒரு செயலாகும். அவரைப் பரிவோடு அணுக வேண்டியது ஆசிரியரின் முக்கியக் கடமையாகும். அருகில் அமர்ந்து அன்போடு அவரின் மன இறுக்கத்துக்கான காரணத்தைக் கேட்கலாம். குடும்ப பின்னணி, வாழும் சூழலைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
அம்மாணவர் முன்னெடுக்கும் சிறு முயற்சி களைக்கூட மற்றவர்களுக்குத் தெரியுமாறு எடுத்துச் சொல்லிப் பாராட்டலாம். செயல் வழிக் கற்றலை அறிமுகம் செய்யலாம். தட்டிக் கொடுத்து ஊக்கம் கொடுக்கலாம். மாணவர்கள் மனம் விட்டுப் பேச அனுமதிக்கப் பழகுவோம். மறுபக்கத்தில் அவர்களது மெளனத்துக்குச் செவி மடுப்போம். பல நேரம் மௌனம் வலியைத்தான் பிரதிபலிக்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும் குழந்தைகளின் மௌனத்துக்குப் பின்னால் உள்ள சொற்களைக் கண்டறியும் ஆய்வாளராக மாற வேண்டும்.
நன்றி தி இந்து