தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்டத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு
டெங்குவை கட்டுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டெங்கு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் பல்வேறு காய்ச்சல்களை கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரசாரம், காய்ச்சலை கண்டறிந்து, அவற்றை குணப்படுத்துவதற்காக மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் பிரிவுகள், நோய் கண்டறியும் சிறப்பு கருவிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னையில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில், டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் தேங்கும் இடங்கள், கட்டுமானப் பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக துப்புரவு படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பணிகளை, வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்கள் தினந்தோறும் அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
இப்பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள். இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவைகளை நிறைவேற்றவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப்பணி நிலையிலுள்ள ஒரு உயர் அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர்கள் மாவட்டத்திற்கு சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.