ரயில் நிலையங்களில் வைஃபை திட்டம்: கூகுள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை நகரங்கள்!
இந்தியாவில் வைஃபை வசதி செய்யப்படவுள்ள முதல் 100 ரயில் நிலையங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ரயில் நிலையங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள 500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். கூகுள் நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்து என்று மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, இந்தியாவில் வைஃபை வசதி ஏற்டுத்தப்படவுள்ள 100 ரயில் நிலையங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக குறைந்தது தினமும் ஒரு கோடி மக்கள் கடந்து செல்லும் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களுடன் கோவை, மதுரை திருச்சி ,ஈரோடு ரயில் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. சென்னையை பொறுத்த வரை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வைஃவை வசதி உருவாக்கப்படவுள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவனத்தின் பிளாக்கில் '' இந்தியாவிலேயே இதுதான் மிகப் பெரிய வை ஃபை இணைப்பு தளமாக இருக்கும். அதுபோல் உலகிலேயே அதிகம் பேர் வைஃபையை பயன்படுத்தும் திட்டமாகவும் இது மாறும் '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.