எல்.கே.ஜி - யு.கே.ஜி வகுப்புகளை துவங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை
அங்கன்வாடி பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை நேரடியாக நடத்த அனுமதிக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு, தமிழக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, மாநில செயலர் இளங்கோவன் ஆகியோர், முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்:தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், நவம்பர் 1 முதல் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் சுமுகமாக நடத்தப்படுகின்றன.
அங்கன்வாடி பள்ளிகளும் செயல்பட துவங்கி விட்டன. இரண்டரை வயது குழந்தைகள் அங்கன்வாடிக்கு வந்து படிக்கின்றனர். அவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.தனியார் பள்ளிகளில் படிக்கும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த, அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை; 20 மாதங்களாக ஆன்லைன் வகுப்புகளில் படிக்கின்றனர். ஆன்லைன் வகுப்புகள் தொடர்வது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் தான் ஆரம்ப கல்வியின் அடித்தளம். அவர்கள் ஆடிப்பாடி, விளையாட்டு முறையில் கல்வி கற்கும் முறைக்கு இனியும் தடை போடாமல், நேரடி வகுப்புகளை துவங்கலாம்.
தமிழகத்தில் சிறப்பான சுகாதார சூழல் உள்ள நிலையில், கொரோனா விதிமுறைகளை அனைத்து வகை பள்ளிகளும் சிறப்பாக பின்பற்றுகின்றன. எனவே, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை நேரடியாக துவங்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.