அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாட ஆணை
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்தக் கூடாது' என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமீப காலமாக அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை, பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுகின்றன. இதனால், விழாவில் பங்கேற்போர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் போது, உதட்டளவில் கூட பாடுவதில்லை.எவ்வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல், இயந்திரகதியில் எழுந்து நிற்கின்றனர்.
எந்த நோக்கத்திற்காக, தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது. எனவே, இனி வரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக, விழாவை நடத்துவோர், இதற்கென பயிற்சி பெற்றவர்களை வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட, ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.