நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 16 வரை நீட்டிப்பு
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 16 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி, நேற்றிரவுடன் நிறைவடைய இருந்தது.
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 16 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 16 ஆம் தேதி இரவு 10.50 மணி வரை இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதே போன்று, மார்ச் 16 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைதளம் வழியாக மார்ச் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவுக்கு ரூ.1,700, எஸ்.சி/ எஸ்.டி பிரிவுக்கு ரூ.1,000, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600 நீட் தேர்வுக்கான கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.