ஆசிரியர்கள், அலுவலர்கள் ஜன.8 முதல் அடையாள அட்டை அணிந்து வர வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர் வரும் திங்கள்கிழமை (ஜன.8) முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பணியின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி புகைப்படம், பணியில் சேர்ந்த தேதி, பெயர், முகவரிஉள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை தயாரித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டுமே அடையாள அட்டையை அணிந்து வந்ததாகத் தெரிகிறது.
பெரும்பாலான பள்ளிகளில் தமிழக அரசின் உத்தரவை கடைப்பிடிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஜன.8-ஆம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் ஜன.8-ஆம் தேதி முதல் அனைத்து வருவாய் மாவட்டங்களிலுள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது அணிய வேண்டும். அப்படி அடையாள அட்டை அணியாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுப்படி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்தல், தன் விவரங்களைச் சேகரித்தல் போன்ற பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, அனைத்து ஆசிரியர், அலுவலர்கள் அடையாள அட்டை அணிந்து வர மேலும் சில வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.