தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 6 சதவீத அகவிலைப் படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரரர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 6% அகவிலைப்படி உயர்வை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கான 6 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போதெல்லாம் அறிவிக்கப்படுகிறதோ அதை பின்பற்றி தமிழக அரசும் உடனடியாக அகவிலைப்படி உயர்வை தனது ஊழியர்களுக்கு அறிவிக்கும்.
ஆனால் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து பல வாரங்களாகி விட்ட நிலையில் தமிழக அரசு அதுகுறித்து வாயே திறக்காமல் அமைதி காத்து வந்தது அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் சுமார் 18 லட்சம் பேர் பயனடைவர். இவர்களுக்கு ரூ366 முதல் 4,620 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.