தேசிய திறனாய்வு தேர்வுக்கு படிக்கும் பள்ளி முலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவி தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் தங்கள் பள்ளிகளை அணுகுமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவர் களின் கல்வி திறன் அடிப்படையில், சிறந்த மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுவோரை தேர்வு செய்வதற்கான, மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு, ஜனவரியில் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வுக்கு, தமிழக பள்ளிக்கல்வி துறையின் அரசு தேர்வு துறை சார்பில், பள்ளிகள் வழியே மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய திறனாய்வு குறித்து பள்ளிகள் தரப்பில் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வில்லை என, பல பெற்றோர், நம் நாளிதழை தொடர்பு கொண்டு, அதன் நடைமுறைகளை கேட்டனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேசிய திறனாய்வு தேர்வுக்கு தங்கள் பள்ளிகளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தர வேண்டும். விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், 'நேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன்' என்ற ஆங்கில தலைப்பில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்
மேலும், https://apply1.tndge.org/dge-notification/NTS என்ற இணையதள இணைப்பில் விண்ணப்பங்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களிடம் அளிக்க வேண்டும்
விண்ணப்பத்துடன், தங்களது ஜாதி சான்றிதழையும் இணைத்து வழங்க வேண்டும். அதனுடன் சேர்த்து பள்ளிகளின் தரப்பில் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வர்
கூடுதல் தகவல்களை, தலைமை ஆசிரியர்கள் அல்லது தங்களின் வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பள்ளிகளில் தகவல் கிடைக்காதவர்கள், தங்கள் மாவட்ட கல்வி அலுவலகம் அல்லது அரசு தேர்வு துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.இந்த தகவல்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டு பெறப்பட்டன.