தேர்வு எழுதாமல் தேர்ச்சி இல்லை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரியர் தேர்வு எழுதாமல், தேர்ச்சி பெற்றதாக யாரும் உரிமை கோர முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து, 2020ம் ஆண்டில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசு உத்தரவை எதிர்த்து, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மனுக்கள் தாக்கல் செய்தனர். அரியர் தேர்வு ரத்தை அங்கீகரிக்கவில்லை என, பல்கலை மானியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் பதில் அளித்தன. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆஜராகி, அரியர் தேர்வு ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை. அரியர் தேர்வு மாணவர்களுக்கு, இரண்டு முறை துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதி ஆண்டு மாணவர்களும் தேர்வு எழுதினர்,'' என்றார்.
இதையடுத்து, அரசாணையை அமல்படுத்தாததால், தேர்வு எழுதாமல் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவ்வழக்கில் மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. எனவே, சம்பந்தப்பட்ட தேர்வை எழுதாமல், தேர்ச்சி பெற்றதாக யாரும் உரிமை கோர முடியாது என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுஉள்ளது.