அஞ்சல்வழியில் படிக்கலாம் சமஸ்கிருதம்!
ராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் (Rashtriya Sanskrit Vidyapeetha) ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இடம்பெற்றிருக்கும் சமஸ்கிருதம் தொடர்புடைய பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.
பல்கலைக்கழகம்: இந்திய சமஸ்கிருத ஆணையத்தின் (Sanskrit Commission) 1957 ஆம் ஆண்டு பரிந்துரைப்படி, ஆந்திர மாநிலம் திருப்பதியில் 1961 ஆம் ஆண்டு கேந்திரிய சம்ஸ்கிருத வித்யாபீடம் (Kendriya Sanskrit Vidyapeetha Tirupati Society) எனும் சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
1971ஆம் ஆண்டில் இந்திய அரசின் கல்வித்துறையின் கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்ட ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தன் (Rashtriya Sanskrit Sansthan) எனும் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் (Rashtriya Sanskrit Vidyapeetha) எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. இக்கல்வி நிறுவனம் 1987 ஆம் ஆண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழக (Deemed University) நிலைக்கு உயர்த்தப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்புடைய இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (M.Phil), முனைவர் (Ph.D) போன்ற ஆய்வுப் பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்புடைய சில படிப்புகள் அஞ்சல் வழியிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அஞ்சல்வழிப் படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் ஆறு மாத கால அளவிலான சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்பு (Certificate Course in Sanskrit), ஒரு வருட கால அளவிலான சமஸ்கிருதப் பட்டயப்படிப்பு (Diploma in Sanskrit) மற்றும் யோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்பு (P.G. Diploma in Yoga Vijnan), இரண்டு வருட கால அளவிலான பிரக் சாஸ்திரி (Prak- Sastri), மூன்று வருட கால அளவிலான சாஸ்திரி (Sastri), மூன்று வருட கால அளவிலான கணினிப் பயன்பாடுடனான சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்பு (B.A Sanskrit Computer Application), இரண்டுவருட கால அளவிலான ஆச்சார்யா (Acharya) படிப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. மேற்காணும் படிப்புகளில் சாஸ்திரி படிப்பு இளநிலைப் பட்டப்படிப்புக்கும் (B.A), ஆச்சார்யா படிப்பு முதுநிலைப் பட்டப்படிப்புக்கும் (M.A) இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்புக்கு 13 வயது நிரம்பிய எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். சமஸ்கிருதப் பட்டயப்படிப்புக்கு இந்நிறுவனம் அல்லது புதுடெல்லியிலுள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான் வழங்கும் பிரக் சாஸ்திரி அல்லது +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
யோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிரக்- சாஸ்திரி படிப்பிற்கு 10 அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சாஸ்திரி மற்றும் சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்புக்கு (B.A Sanskrit) பிரக் சாஸ்திரி அல்லது +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆச்சார்யா படிப்புக்கு சாஸ்திரி அல்லது சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் அஞ்சல்வழியிலான படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை அஞ்சல்வழியில்பெற விரும்புவோர் வேண்டுதல் கடிதத்துடன், ‘The Registrar, Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati’ எனும் பெயருக்கு ரூ.200-க்கான வங்கி வரைவோலையினைப் பெற்று, அதன் பின்புறம் பெயர், சேர விரும்பும் படிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு ‘The Director, D.D.E., Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati - 517507, Andhra Pradesh’ எனும் முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பல்கலைக்கழகத்தின் http://rsvidyapeetha.ac.in என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பமெனில் நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணம் ரூ.200க்கான வங்கி வரைவோலையினைச் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.8.2017, அதன் பின்னர் 15.9.2017 வரை ரூ.100 தாமதக் கட்டணத்துடனும், 30.9.2017 வரை ரூ.200 தாமதக் கட்டணத்துடனும் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க முடியும்.
கல்விக் கட்டணம்: சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்புக்கு ரூ.1700, சமஸ்கிருதப் பட்டயப்படிப்புக்கு ரூ.2200, யோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு ரூ.8700, எனக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரக் சாஸ்திரி படிப்புக்கு ரூ.3700, சாஸ்திரி படிப்புக்கு ரூ.4000 சாஸ்திரி (கணினி பயன்பாடு) ரூ.4200 ஆச்சார்யா படிப்புக்கு ரூ.4700 என்று ஆண்டுக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 40% வரை கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்கள் திருப்பதியிலுள்ள இப்பல்கலைக்கழக மையத்தில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்புகள் குறித்து மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது ‘Directorate of Distance Education, Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati - 517064, (A.P)’ எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது directorddersvp@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம். இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி அலுவலகத்தின் 0877-2287745 (அலுவலகம்), 0877-2287691 (இயக்குநர்) அல்லது 0877-2287649 தொலைதூரக்கல்வி அலுவலக நீட்சி (Ext) 256, 262 எனும் எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.