‘அன்று படம்... இன்று பாடம்’ விஸ்வரூபமாக உருவெடுத்த விஷூவல் கம்யூனிகேசன்
சினிமா.... அப்போதைய காலகட்டத்தில் சினிமா துறை சார்ந்து படிக்க தனியாக பாடங்கள் எதுவும் இல்லை. ஆனால், தற்போது வளர்ச்சியடைந்து வரும் நவீன காலத்தில் சினிமா, பத்திரிகை, அனிமேஷன், விளம்பரம் என பல்வேறு துறைகளுக்கு என தகுந்த படிப்புகள் உருவாகி உள்ளது. சமீப காலமாக கம்ப்யூட்டர் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடம் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளிலே ஆர்வம் அதிகரிக்க துவங்கியுள்ளது. பிளஸ் 2 படிப்பிற்கு பின் கல்லூரியில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பது மாணவர்களுக்கு ஒரு சவாலாகும். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் போன்று தற்போது மாணவர்களிடம் ஊடகத்துறை என்னும் விஷூவல் கம்யூனிகேஷன் பிரபலமாகி வருகிறது. சினிமா, ஊடகம், அனிமேஷன் போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய இந்த பட்டப்படிப்பு தற்போது அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்த துறையை தேர்வு செய்து படித்தால் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்கின்றனர் விஸ்காம் துறை பேராசிரியர்கள். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கலைப் பிரிவு என எந்தப் பிரிவை படித்தவர்களும் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். விஷூவல் கம்யூனிகேஷன் என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும். இதன் மூலம் சிந்தனைகளும், செய்திகளும் படித்து மற்றும் பார்த்து புரிந்து கொள்ளும் வடிவங்களாக காட்டப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் விஸ்காம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
விஸ்காம் பிரிவில் மீடியா தொடர்பான புகைப்படம் எடுத்தல், குறும்படம் எடுத்தல், அனிமேஷன், விளம்பர டிசைனிங் போன்ற பல்வேறு வகை பாடத்திட்டங்கள் உள்ளது. இதில் பிரின்ட் மீடியா, எலக்ட்ரானிக் மீடியா ஆகிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. பிரின்ட் மீடியா பிரிவில் விசிட்டிங் கார்டுகள், வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள் தயாரித்தல் மற்றும் இதை கம்ப்யூட்டர் முறையில் உருவாக்கும் முறைகள், பத்திரிகை தொடர்பான தனித்திறமைகள் வளர்த்து கொள்ளுதல், செய்தி சேகரிக்கும் விதங்கள், செய்தி குறிப்பெடுக்கும் விதங்கள், செய்திகளை அளிக்கும் விதங்கள் குறித்து பயிற்சி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
எலக்ட்ரானிக் மீடியா பிரிவில் கம்ப்யூட்டர் மூலமாக நியாண்டோ சாப்ட்வேர், சவுண்ட் போர்ஜ் சாப்ட்வேர், மேக்ரோ மீடியா பிளாஸ், கோரல் டிரா உள்ளிட்ட சில சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படுகிறது. மேலும், செயல்முறையாக புகைப்படம் எடுத்தல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைப்படம் உருவாக்கும் பயிற்சி, 2 டி மற்றும் 3 டி அனிமேஷன்கள் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. ஒரு சில கல்லூரிகளை தவிர, பெரும்பாலான கல்லூரிகளில் இப்பாடப்பிரிவில் சேர தனியாக நுழைவு தேர்வுகள் எதுவும் இல்லை.
எதில் வாய்ப்பு?
இளங்கலை பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தவர்களுக்கு மல்டி மீடியா, அனிமேஷன் துறை, விளம்பர துறை, புகைப்படம் எடுத்தல், தொலைகாட்சி கிராபிக் துறைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளது. இதில் பத்திரிகை துறை சார்ந்த படிப்புகளை படித்தவர்களுக்கு பல்வேறு பத்திரிகைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளது. திரைப்படம் சார்ந்த பிரிவை படித்தவர்கள் திரைப்படத்துறையில் சேரலாம். புகைப்படம் எடுத்தல் தொடர்பாக படித்தவர்கள் சொந்தமாக புகைப்படம் எடுக்கும் ஸ்டியோ வைத்து கொள்ளலாம்.
மேல்படிப்புகள்: இளநிலை முடித்தவர்கள் விருப்பப்பட்டால் முதுகலை மாஸ் கம்யூனிகேசன் மீடியா பட்டப்படிப்பை படிக்கலாம். முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்பிஏ, பிஎச்டி போன்ற படிப்புகளை படிக்கலாம். இதில் பட்டம் பெறுபவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளது. சிந்தனை திறனும், செயலாக்க முறையும் இருந்தால் இத்துறையில் சாதிக்கலாம்.