தமிழகத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது
கேரளாவில் ஒரு எழுத்தாளர் புத்தகம் எழுதினால், 50 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை ஆகின்றன. தமிழகத்திலும் அப்படியான நிலை வர வேண்டும். மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும்போதுதான், இலக்கிய வளர்ச்சி சாத்தியமாகும் என்று கவிஞர் இரா. பூபாலன் கூறினார்.
தமிழகத்தில் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒரு பதிப்புக்கு, 1000 புத்தகங்கள் போடுவது வழக்கம். ஆனால், இப்போது, 300 புத்தகங்கள்தான் போடப்படுகின்றன என்று கவிஞர் இரா. பூபாலன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கோவையில் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், 224வது இலக்கியச் சந்திப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கவிஞர் நந்தன் கனகராஜ் எழுதிய ‘அகாலத்தில் கரையும் காக்கை’ கவிதைத் தொகுப்பு, கவிஞர் இரா. பூபாலன் எழுதிய ‘அரூபத்தின் வாசனை’, ‘திரும்புதல் சாத்தியமற்ற பாதை’ ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அகாலத்தில் கரையும் காக்கை கவிதைத் தொகுப்பு நூலை கவிஞர் ம.நந்தினி அறிமுகம் செய்து பேசினார். ‘அரூபத்தின் வாசனை’, ‘திரும்புதல் சாத்தியமற்ற பாதை’ கவிதை நூல்களை முனைவர் ப.சின்னச்சாமி அறிமுகம் செய்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏற்புரை ஆற்றிய கவிஞர் இரா.பூபாலன் பேசியதாவது: “தமிழகத்தில் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழில் ஒரு புத்தகத்தை ஒரு பதிப்புக்கு, 1000 புத்தகங்கள் போடுவது வழக்கம். ஆனால், இப்போது 300 புத்தகங்கள்தான் போடப்படுகின்றன. அதுவே விற்பனை ஆவதில்லை. பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு எழுத்தாளர் புத்தகம் எழுதினால், 50 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை ஆகின்றன. தமிழகத்திலும் அப்படியான நிலை வர வேண்டும். மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும்போதுதான், இலக்கிய வளர்ச்சி சாத்தியமாகும்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.