தொடரும் தற்கொலைகள்: மாணவர்களின் மனநிலையை அறிய முயற்சி
தமிழகத்தில் அண்மைக்காலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட்தேர்வு அச்சத்தால் சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து, நேற்று அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் இன்று காலை வேலூரைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்துக் கொண்டனர்.
நீட் தேர்வை எழுத பயந்தும் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்திலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்கள் தங்களது உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்.
நீட் தேர்வால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தருவதற்காக 104 மருத்துவ சேவையில் பிரத்யேக மையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் 104 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து உரிய மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி நண்பர்களாக பழகி இயல்பு நிலைக்கு திரும்ப வழி வகை செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டி.எம்.எஸ் வளாகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ரீதியாக ஆலோசனை வழங்கும் 104 சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடக்கி வைத்தார்.
நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்களுக்கு அவர் கவுன்சிலிங் அளித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
மாணவர்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை தேர்வு எழுதிய மாணவர்களிடம் பேசத் தொடங்கியுள்ளனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை அறிய முயற்சி நடைபெறுகிறது. மாணவர்களிடத்தில் நம்பிக்கை தரும் வகையில் இந்த ஆலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.