நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பதனால் வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக 9-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து வருகிற 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு கூட்டங்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை தயார்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும் உடைந்த இருக்கைகள், மேஜைகள், கதவு, ஜன்னல் போன்றவற்றை சரிசெய்யும் பணியும் நடைபெறுகிறது. கழிப்பறைகள் சுத்தப்படுத்தும் பணியும் நடந்தது. குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகளும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.