நீட் விலக்கு பெற்றே தீருவோம்
நிச்சயமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீர்வோம், என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவ படிப்புக்கான, NEET நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி, ஜெயித்துக் காட்டுவோம் வா என்ற தலைப்பில், நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவ - மாணவியர், NEET தேர்வு எழுதி உள்ளனர்.
அவர்களுக்கு, மன நல ஆலோசகர்கள், மருத்துவர்கள் உதவியுடன், தொலைபேசியில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. NEET தேர்வு எழுதிய 15 சதவீதம் மாணவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.மாணவர்கள் தேர்வுகளை கண்டு பயப்படாமல், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி இன்றும், நாளையும் மாலை 3:00 மணிக்கு, கல்வி தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பப்படும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சட்டசபை முதல் கூட்டத் தொடரில், NEET தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள 12 மாநில முதல்வர்களுக்கும், 84 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கருத்துகளை அனுப்பி, NEET தேர்வுக்கு எதிராக, மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, ஏழு மாநில மொழிகளில், நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை மொழி பெயர்த்து, அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி NEET தேர்வுக்கு எதிராக, பல்வேறு முயற்சிகளை முதல்வர் எடுத்து வருகிறார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றே தீருவோம்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பேச்சாளர் சுகிசிவம், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தம் அறக்கட்டளை நிர்வாகி செல்வகுமார் ஆகியோர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரையாற்றினர்.