செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் சுயசிந்தனைதான் நம்மை வளர்க்கும்!

ChatGPT, DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இளைஞர்கள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். உங்களின் முன்னேற்றத்திற்கு உங்கள் சிந்தனை மிகவும் அவசியம் என்று கூறிய அவர், தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெற முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் மிரட்டி வருகிறது. ஏற்கனவே வந்த ChatGPT போன்ற AI தொழில்நுட்பங்களை காட்டிலும் தற்போது சீனா தரப்பில் உருவாக்கப்பட்டுள்ள DeepSeek பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் பலரும் AI தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா, சீனா தொழிற்நுட்பங்களிலும் கடுமையான போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அடுத்ததாக AI தொழிற்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் முகேஷ் அம்பானி, AI தொழில்நுட்பம் ஒரு கருவி தான். உங்களின் முன்னேற்றத்தில் சுயசிந்தனை அவசியம் என்று தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தில் உள்ள பண்டித தீனதயாள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அப்போது முகேஷ் அம்பானி பேசுகையில், 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் உலகிலேயே இந்தியா அதிக வளம்மிக்க நாடாக மாறும். அதற்காக இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடாது. விரைவில் நாம் எரிபொருள்களை விடுத்து எனர்ஜியை பயன்படுத்த தொடங்க வேண்டும்.
அதேபோல் இளைஞர்கள் அனைவரும் நிச்சயம் ChatGPTயை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் AI தொழிற்நுட்பம் உதவியாக இருக்கும். ஆனால் நாம் முன்னேற வேண்டும் என்றால், நம் சிந்தனையால் மட்டுமே முடியும். செயற்கை நுண்ணறிவு மூலமாக நாம் முன்னேற்றம் அடைய முடியாது. அதனை யாரும் மறக்காமல் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
தற்போது வேகமாக மாறி வரும் உலகில், நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றியை தொடர வேண்டுமென்றால் கற்றுக் கொள்வதை நிறுத்த கூடாது. இளைஞர்கள் பலரும் விவசாயிகளுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் பயோ-எனர்ஜி போன்ற புதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். அது அதிகளவில் புதிய வேலைவாய்ப்புகளை கொடுக்கும்.
அதேபோல் AI, Green Energy மற்றும் சந்தைப் பொருட்கள் ஆகிய மூன்றும் தான் மனிதகுலத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறையினருக்கு இந்த இடத்தில் வாழ்வதற்கு மேம்படுத்தவும் நாம் பசுமை தொழிற்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.