பெண் பிள்ளைகள் கல்விக்காகும் செலவை பெற்றோரிடம் கோர உரிமை உள்ளது
'கல்விச் செலவை பெற்றோரிடம் கோர மகள்களுக்கு, மறுக்க முடியாத, சட்டப்பூர்வமான உரிமை உள்ளது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கை நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புய்யான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
உத்தரவில் அமர்வு கூறியுள்ளதாவது:
தங்கள் கல்விச் செலவை பெற்றோரிடம் இருந்து கோருவதற்கு மகள்களுக்கு மறுக்க முடியாத, சட்டப்பூர்வமான, அடிப்படை மற்றும் தார்மிக உரிமை உள்ளது. இது பல வழக்குகளில் ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதுபோல, தங்களுடைய பொருளாதார நிலைக்கு உட்பட்டு, மகள்களின் கல்விக்கு செலவிடுவது பெற்றோரின் கடமையாகும்.
இந்த குறிப்பிட்ட வழக்கில், 26 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி, கணவர், 73 லட்சம் ரூபாயை வழங்க முன்வந்துள்ளார்.
அதில், 30 லட்சம் ரூபாய் மனைவிக்கும், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் படிக்கும் மகளின் கல்விச் செலவுக்காக, 43 லட்சம் ரூபாயும் தரப்பட வேண்டும் என, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தன் சுய கவுரவத்தை காக்கும் வகையில், இந்த தொகையைப் பெற்றுக் கொள்ள மகள் மறுத்து, அதை திருப்பி அனுப்பியுள்ளார். அதை ஏற்க தந்தை மறுத்துள்ளார்.
கல்விச் செலவைக் கோருவதற்கு முழு உரிமை உள்ளதால், அந்தத் தொகையை மகள் பெற்றுக்கொள்ளலாம். அதை தன் விருப்பப்படி அவர் செலவு செய்யலாம்.
இதையடுத்து, இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது. இது தொடர்பாக வேறு ஏதாவது வழக்குகள் இருந்தால், அவை தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.