புதிய கல்வி கொள்கை அமல்படுத்த முதல்வருக்கு கோரிக்கை
தமிழக மாணவர்களின் நலன் மற்றும் தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவிகளை கருத்தில் வைத்து, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:புதிய கல்வி கொள்கைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது.பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் மற்றும் என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய ஆராய்ச்சி கல்வி கவுன்சில் ஆகியவை, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கைகளை துவங்கி விட்டன.
தமிழகம், மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள், புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தும் முயற்சிகளை துவங்கி விட்டன.பள்ளி கல்வி கட்டமைப்பில் மாற்றம், நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் அதில் உள்ளன.தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், 2005ல் கொண்டு வந்த தேசிய பாடத்திட்ட கொள்கையை, மாநில அரசு செயல்படுத்தவில்லை. அதனால், பள்ளி கல்வி தரம் குறைந்து, JEE, மற்றும் NEET போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை, நம் மாணவர்கள் பெறவில்லை.
தற்போதைய நிலையில், புதிய கல்வி கொள்கையை, தேவையான மாற்றங்களுடன், தமிழகம் செயல்படுத்த வேண்டும். அப்போது தான், நம் மாணவர்கள் பின்தங்காமல் முன்னேற முடியும்.
கல்வி, மத்திய அரசின் பட்டியலில் உள்ளதால், மாநில அளவில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாவிட்டால், இந்திய உயர் கல்வி ஆணையத்தின் நெறிகள் காரணமாக, பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆராய்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகளுக்கு, மத்திய நிறுவனங்களில் இருந்து நிதி பெறுவதில் பிரச்னை ஏற்படும்.எனவே, தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.