அரசு பள்ளிகளை நவீனமாக்கப்படும் சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு
அரசு பள்ளிகளை நவீனமாக்க ஒரு மாபெரும் திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். காவிரி ஆற்றில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை, தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது,'' என, கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் துவங்கியது. இதில், கவர்னர் ஆர்.என்.ரவி முதல் முறையாக உரையாற்றினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
கொரோனாவை கட்டுப்படுத்த, மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. இந்த முயற்சிகள் முழுமையாக வெற்றி பெற, மக்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். ஒமைக்ரான் வைரசின் சவால்களை எதிர்கொள்ளவும், அரசு தயார் நிலையில் உள்ளது வரும் 2030க்குள் தமிழகத்தின் பொருளாதாரம், 74 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இந்த இலக்கை நிறைவேற்ற, '1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி' என்ற விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்படும்
கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்
கால்வாய்களை துார்வாரி, மேட்டூர் அணையில் இருந்து நீரை விடுவித்து, குறுவை சாகுபடியை ஊக்குவிக்க, 61 கோடி ரூபாயில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கப்பட்டது. அதனால், இந்த ஆண்டு 4.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து, வரலாறு காணாத சாதனை படைக்கப்பட்டுள்ளது
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளவும், அரசுக்கு உரிய வருவாயை திரட்டவும், 'இயற்கை வள மேலாண்மை திட்டம்' வகுக்கப்படும்
முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவான, 152 அடியை எய்த, தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். காவிரி ஆற்றில் மேகதாதுவில், கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தை, தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது
நதி நீர் பங்கீட்டில், தன் உரிமைகளை ஒருபோதும் கைவிடாமல், தன் நியாயமான பங்கிற்காக தமிழகம் தொடர்ந்து போராடும். கால்நடைகளுக்காக தொலைதுார கிராமங்களில், 7,760 சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்
இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை பாதுகாக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து இயந்திர படகுகளிலும், தகவல் தொடர்பு கருவிகளை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதில், அரசு உறுதியாக உள்ளது. அரசு பள்ளிகளை நவீனமாக்கிட ஒரு மாபெரும் திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள 24 ஆயிரத்து 345 அரசு தொடக்கப் பள்ளிகளில், திறன்மிகு வகுப்பறைகள், புதிய கட்டடங்கள்; 6,992 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், நவீன அறிவியல் மற்றும் மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் அகன்ற அலைவரிசை வசதி, துாய்மையான பராமரிப்புடன் கூடிய சுகாதார மையங்கள் உருவாக்கப்படும்
நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன், ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சிகளும், மாணவர்களுக்கான மென்திறன் வளர்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும்.
உயர் கல்வி பாடத்திட்டத்தை மறு சீரமைக்க அரசு முயற்சித்து வருகிறது. இது தவிர தொழில் துறை உதவியுடன், பாலிடெக்னிக் கல்லுாரிகளின் பாடத் திட்டமும், ஆய்வக வசதியும் மேம்படுத்தப்படும்
அரசின் சொத்துக்களை திறம்பட மேலாண்மை செய்ய, தகுந்த தொழில்நுட்பத்துடன் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு ஒன்று செயல்பாட்டிற்கு வரும்.தொழில் மேம்பாடு
தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல் முகவரியாக, தமிழகத்தை மாற்ற அரசு உறுதியாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 150 ஏக்கரில் மருத்துவ கருவிகள் பூங்கா; துாத்துக்குடியில் 1,100 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் அறைகலன் பூங்காவை அரசு அமைத்து வருகிறது. இந்த பூங்காக்களில், தொழில் துவங்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
இந்த பூங்காக்களின் முதல் கட்டப் பணிகளை, இம்மாத இறுதிக்குள் முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். இந்த இரு பூங்காக்கள் வழியே, மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை, விரைவில் நடத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அடுத்த ௧௦ ஆண்டுகளில், தமிழகத்தை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே, முதல்வரின் தொலைநோக்கு திட்டம்
சாகச சுற்றுலாவை உள்ளடக்கிய, புதிய சுற்றுலா கொள்கை வெளியிடப்படும்
கோவில்களின் வரலாறு, கட்டடக்கலை, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட செந்தமிழ் இலக்கியங்கள் குறித்த புத்தகங்களை வெளியிட, ஹிந்து சமய அறநிலைய துறையால், நவீன வசதிகளுடன் பதிப்பக பிரிவு அமைக்கப்படும்
கோவில்களிலும், மடங்களிலும் கிடைக்கப் பெறும் அரிய பனைவோலை சுவடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
அகழாய்வுகளில் கிடைத்த அரிய பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக, நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.
அனைத்து தொழிற்படிப்புகளிலும், அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி, இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக நம் மாநிலத்தை உருவாக்குவோம்.இவ்வாறு கவர்னர் பேசினார்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஆண்டு சட்டசபையில், அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது உரையின் முடிவில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.நேற்று கவர்னர் உரை முடிவில், 'வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு' என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதை கவர்னர் கூறிய பின், 'நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்' என்று தெரிவித்தார்.
கவர்னர் உரையில் மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகள்:
வெள்ள நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, 6,230 கோடி ரூபாய் நிதி கோரி, விரிவான கோரிக்கைகளை அரசு அளித்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, உடனே நிதியை விடுவிக்க வேண்டும்
மாநிலத்திற்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி., வரி இழப்பீடு, ஜூன் 30ல் முடிகிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு, இந்த இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டும் என ஜி.எஸ்.டி., கவுன்சில் மற்றும் மத்திய நிதி அமைச்சகத்தை அரசு வலியுறுத்தும்
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரையும், 75 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க, அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும். இந்திய, இலங்கை மீனவர்களிடையே மீண்டும் நேரடி பேச்சை துவக்க, வெளியுறவுத்துறை ஆவன செய்ய வேண்டும்
தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு, 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் தேவையற்றவை என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.இந்த கோரிக்கைகள் கவர்னர் உரையில் இடம்பெற்றிருந்தன.
சட்டசபையில்உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் பேசியதாவது: முதல்வர் பதவியேற்ற முதல் வினாடியிலிருந்தே, ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கி விட்டு, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்சிஜனும், அத்தியாவசிய மருந்துகளும் மாநிலமெங்கும் கிடைப்பதை உறுதி செய்தார். தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, கொரோனா இரண்டாம் அலையை திறம்பட கையாண்ட முதல்வர் ஸ்டாலினை மனமார பாராட்டுகிறேன்.இவ்வாறு கவர்னர் பேசினார்