காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலில் இன்று உருவாகிறது!
ஏற்கனவே பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக நாளை, 10 மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம், சென்னை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு, அதி கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு இடைவிடாமல் மழை பெய்யும் என்பதால், சென்னை உள்ளிட்ட
பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டும், அதே போன்ற மழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 6ம் தேதி இரவு முதல், நேற்று முன்தினம் காலை வரையிலும், ஒன்பது மணி நேரத்துக்கும் மேலாக சென்னை நகரில் மழை கொட்டியதால், நகரம் முழுதும் வெள்ளக்காடானது. அதிகபட்சமாக 23 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:வங்கக்கடலின் தென் கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் வரை, கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ., உயரத்தில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இது படிப்படியாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த மண்டலம், நாளை மறுதினம் காலை தமிழக கடற்பகுதியை நெருங்கும்.இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும். இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், 20 செ.மீ., வரை மிக கன மழை பெய்யும்.துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், 12 செ.மீ., வரை கன மழை பெய்யும்.
நாளை (10-11-2021) பல மாவட்டங்களில், 20 செ.மீ.,க்கு மேல் அதி கன மழை பெய்யும். கடலுார், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை அதி கன மழை பெய்யும்.திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 20 செ.மீ., வரையில் மிக கன மழை பெய்யும்.
நாளை மறுதினம்(11-11-2021), சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலுார், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 20 செ.மீ.,க்கு மேல் அதி கன மழை பெய்யும்.ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், 20 செ.மீ., வரையில் மிக கன மழை பெய்யும்; மற்ற மாவட்டங்களில் கன மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்; மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய மழை பட்டியலில், நாளையும், நாளை மறுதினமும் அதி கன மழை பெய்யும் பகுதிகள், சிவப்பு வண்ண குறியீட்டில் இடம் பெற்று உள்ளன.சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும், வேறு சில மாவட்டங்களிலும் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்னும் நான்கு நாட்களுக்கு வெள்ள அபாயம் நீடிக்கும் என்று தெரிகிறது.