பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் கல்வி, வறுமை ஒழிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் உயர்நீதி மன்றம் கருத்து
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து சாமி சிலைகள் சமீபகாலமாக கொள்ளை அடிக்கப்படுகின்றன. இந்த சிலைகள் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, புன்னைநல்லூர் சோழர்கால நடராஜர் வெண்கல சிலை உள்ளிட்ட 157 சிலைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் போதுமான பாதுகாப்பு இல்லாததால், சிலை திருட்டுகள் அதிகம் நடக்கின்றன. தற்போது கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும், காவலாளிகள் இருந்தால் மட்டுமே சிலை திருட்டை தடுக்க முடியும்.
ஏ.டி.எம். மையங்களுக்குக்கூட இரவு காவலாளி நியமிக்கப்படும்போது, முக்கியமான கோவில்களுக்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவது இல்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டாலும், காவலாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரத்து 500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் இரவு காவலாளிகளை நியமிக்க வேண்டும். நியமிக்கப்படும் காவலாளிகளுக்கு பணி வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில்களில் இரவுநேர காவலாளி நியமிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அதனால் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கை முடித்துவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
பின்னர், கோவில்கள் சம்பந்தமாக ஏராளமான பொதுநல வழக்குகள் தொடரப்படுகின்றன. ஆனால் இதைவிட பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள், கோவில்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், கல்வி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பிற விவகாரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.