கல்வி அரசியல் சட்டத்தின் பொது பட்டியலில் உள்ளது
கல்வி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பொது பட்டியலின் கீழ் வருகிறது. மேலும் நாடு முழுதும் பெரும்பான்மையான பள்ளிகள் மாநில அரசுகளின் அதிகார எல்லைக்குள் தான் உள்ளன, என, பார்லிமென்டில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியிலான முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இக்கோரிக்கை குறித்த விபரங்களை மஹாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட், கேரளா உள்ளிட்ட பிற மாநில அரசுகளிடம் அளித்து ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
கல்வி பொதுப்பட்டியலில் வருவதால் இதுகுறித்து முடிவுகளை எடுப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது' என்ற விஷயம் இதில் முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில் குளிர் கால கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று அமளி காரண மாக இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தி.மு.க., - எம்.பி., ராஜா, கல்வி விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். இதற்கு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்: அரசியலமைப்புச் சட்டத்தின்படி கல்வி என்பது, மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரு அரசுகளின் அதிகார எல்லைகளுக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த பொதுப்பட்டியலின் கீழ் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர நாடு முழுதும் உள்ள பள்ளிகளை கருத்தில் கொள்ளும்போது, அவற்றில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் அமைந்த பள்ளிகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தின் கீழ்தான் அமைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழக அரசு வலியுறுத்தி வரும் நீட் தேர்வு விலக்கு கோரிக்கை பல்வேறு மட்டங்களில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு அளித்துள்ள இந்த பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.