இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து கடந்த 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சென்னை டிபிஐ வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் டிசம்பர் 23 ஆம் தேதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உண்ணாவிரதப் போராட்டம் என்பதால், அவர்களுள் 200 பேர் வரை உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், இந்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் வழங்குவதில் இருக்கும் முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. அந்த அறிக்கை பெறப்பட்ட பின்னரே கோரிக்கைக்கான தீர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ்