மொபைல் ஆப் பில் சுற்றறிக்கை திருப்பூர் மாவட்டத்தில் துவக்கம்
காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், அனைத்து வகை சுற்றறிக்கையும், 'மொபைல் ஆப்' மூலமாக அனுப்பி வைக்கும் புதிய முயற்சி, திருப்பூர் மாவட்டத்தில் துவங்கியுள்ளது.மின்னாளுமை திட்டத்தில், மக்களுக்கான அரசுத் துறை சேவைகள் நவீனமாக்கப்பட்டுள்ளன. படிவம் வாயிலாக, நகல்களுடன் விண்ணப்பிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. வருவாய் துறை சான்றிதழ் பெற, நேரடியாக, 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்கின்றனர்.தேவையான இணைப்பு ஆவணங்களும், 'ஸ்கேன்' செய்து, விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றன. அரசு அதிகாரிகளும், 'ஆன்லைன்' மூலமாகவே விண்ணப்பத்தை பரிசீலித்து, 'டிஜிட்டல்' கையெழுத்துடன் சான்றிதழ் வழங்குகின்றனர்.திருப்பூர் மாவட்ட மின்னாளுமை பிரிவு, அலுவலக பரிவர்த்தனையிலும், காகித பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு உள்ளது. முதல் கட்டமாக, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, சப் - கலெக்டர்,ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்புவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சுற்றறிக்கை, 'இ -மெயில்' மூலமாக மட்டும் அனுப்பி வைக்கப்படுகிறது. காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், கலெக்டர் அலுவலகம், வருவாய் துறை அலுவலகங்கள் என, பரஸ்பரம், வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் ஆகிய, மொபைல் ஆப் மூலமாக மட்டுமே, அறிக்கை அளிக்கும் உத்தரவு, 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.