இயல்பை விட 29 மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகம்
'ஒரு வாரத்தில், 29 மாவட்டங்களில், இயல்பான அளவை விட, கூடுதலாக மழை பெய்துள்ளது,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:வங்கக் கடலின் தென் கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இது, 12 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த, 48 மணி நேரத்தில், ஒடிசா கடற்கரையை அடையும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, மீனவர்கள்யாரும், வடக்கு அரபிக் கடல், கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடுதல் மழைகடலில் உள்ள மீனவர்கள், கரைக்கு திரும்பும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம், 1 முதல், 7ம் தேதி வரை, 29 மாவட்டங்களில், இயல்பை காட்டிலும், கூடுதலாக மழை பெய்துள்ளது.அக்., 1 முதல், 7 வரை, இயல்பான மழையளவு, 35.4 மில்லி மீட்டர்; பெய்த மழை அளவு, 82 மில்லி மீட்டர். இயல்பை காட்டிலும், கூடுதலாக, 132 சதவீதம் பெய்துள்ளது.மாநிலம் முழுவதும், 6,512 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு மையங்கள், தயார் நிலையில் உள்ளன.பல்துறை அலுவலர்கள் இடம் பெற்ற மண்டல குழுக்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.தலா, 30 பேர் இடம் பெற்ற, ஐந்து மத்திய பேரிடர் மீட்பு குழுக்கள், கோவை, மதுரை,நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, 646 படகுகளில், மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இவற்றில், 514 படகுகள், கரை திரும்பி உள்ளன.மீதமுள்ள, 132 படகு களில், 86 படகுகளில் உள்ளோருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும், 46 படகுகளுக்கு, தகவல் தெரிவிக்க வேண்டி உள்ளது. அதில், 509 மீனவர்கள் உள்ளனர்.அவர்களுக்கு, கடலோர காவல் படை, கப்பல் படை வழியாக தகவல் தெரிவிக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மேட்டூர், பவானிசாகர், பெரியாறு, அமராவதி, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பரம்பிக்குளம், ஆழியாறு, பேச்சிப்பாறை, சோலையாறு அணைகளின், நீர்மட்டம் அதிகரித்துள்ளது.நீர்மட்டம்கிருஷ்ணகிரி, சாத்தனுார், திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட அளவு குறைந்து உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, வீராணம் ஏரிகளில், நீரின் அளவு அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளது.வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன; மக்கள் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு உதயகுமார் கூறினார்