கல்வியில் முன்னேறிய தமிழகம் : கவர்னர் புரோஹித் பெருமிதம்
''மற்ற மாநிலங்களை காட்டிலும், கல்வி உள்ளிட்ட துறைகளில், தமிழகம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.தஞ்சாவூர், கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று காலை கும்பகோணம் வந்தார். ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். திப்பிராஜபுரம் யூனியன் நடுநிலைப் பள்ளியில், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடந்த, பூமி பூஜையில் பங்கேற்றார்.துப்புரவு பணிக்காக, குப்பை அள்ளும் வண்டிகளையும், பொதுமக்களுக்கு குப்பை கூடைகளையும் வழங்கி, கவர்னர் பேசியதாவது:இந்தியாவில், பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளேன். மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. துாய்மை இந்தியா திட்டம், இந்தியாவில் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி, சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் துாய்மைக்காக, வாரத்துக்கு இரண்டு மணி நேரம் வீதம், ஆண்டுக்கு, 100 மணி நேரம் ஒதுக்கி, நாட்டையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்துக் கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.