பாடப் புத்தகத்தில் கி.மு. - கி.பி. என குறிப்பிடும் முறை மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை: அமைச்சர் பாண்டியராஜன்
ம.பொ.சி.யின் 113 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் க.பாண்டியராஜன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம்,
புதிய பாடத்திட்ட வரலாற்று நூல்களில் கி.மு- கி.பி. என குறிப்பிடும் முறைக்கு பதிலாக பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்), பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு பின்) என மாற்றப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
தமிழறிஞர் ம.பொ.சிவஞானத்தின் 113 -ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகர் போக் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன் நம் முன்னே உலா வருவதற்கு ம.பொ.சி. எழுதிய புத்தகங்களே அடிப்படையாக உள்ளன. சிலப்பதிகாரத்தை மிக ஆழமாக ஆராய்ந்து அதுகுறித்த செய்திகளை தமிழர்களிடையே எடுத்துச் சென்றவர். தமிழறிஞர் ம.பொ.சி. பிறந்த நாளை, தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும், அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
இதைத்தொடர்ந்து, புதிய பாடத்திட்ட வரலாற்று நூல்களில் கி.மு. - கி.பி. என்பது, பொ.ஆ.மு.- பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு முன்- பொது ஆண்டுக்கு பின்) என மாற்றப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பதில்:
பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த வல்லுநர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு மதச்சார்பின்மையுடன் குறிப்பிடும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துவின் பெயர் வரக்கூடாது என்ற எண்ணமும் இல்லை; அரசியல் நோக்கமும் இல்லை. ஏனெனில் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்ற அறிஞர்கள் அனைவருமே அரசியல் கலப்பில்லாதவர்கள். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதற்கு இதுவரை எந்தவித எதிர்ப்போ அல்லது புகார்களோ வரவில்லை. அப்படி ஏதேனும் விமர்சனங்கள் வரும்பட்சத்தில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதுகுறித்து கல்வியாளர்கள் சிலர் கூறும்போது, சில வரலாற்று ஆசிரியர்கள் கி.மு., கி.பி. என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, அதே ஆண்டுக்கணக்கில் வரலாற்றில் காலத்தைக் குறிப்பிடுவதற்கு பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின் என்று குறிப்பிட்டு தங்களுடைய வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர். இந்த முறை சர்வதேச அளவில் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் பின்பற்றுவது வழக்கமாகிவிட்டது.
ஆனால், தமிழக அரசின் வரலாற்று பாட நூல்களில் மட்டும் இதுவரை கி.மு., கி.பி. என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. இந்நிலையில் நிகழாண்டு, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் புதிய பாடத் திட்ட வரலாற்று நூல்களில் பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின் என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் விமர்சனம் செய்யும் அளவுக்கு எதுவுமில்லை' என்றனர் அவர்கள்.