வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்: தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதி ஆகியவற்றில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளது.
அதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 13-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். வட தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் “காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில் குமரிக்கடல் பகுதி மற்றும் கேரள மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதி, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. அதனால் மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்து வரும் புயலுக்கு ‘சாகர்' என பெயரிடப்பட உள்ளது. புயலுக்கு பெயர் வைக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு, அடுத்து வர உள்ளது 50-வது புயலாகும். புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கத்தை முதன் முதலில் ஆஸ்திரேலியர்கள்தான் தொடங்கினர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.