அரசு பணியில் அவுட்சோர்ஸிங் முறையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
அரசுப் பணியில் அவுட்சோர்ஸிங் முறையை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த அக்டோபர் மாதம் ஊதிய மாற்றம் தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், அரசின் செலவினங்களைக் குறைத்திட தேவையற்ற பணியிடங்களைக் கண்டறியவும், இதரப் பணியிடங்களில் வெளிமுகமை மூலமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ பணி நியமனங்களை மேற்கொள்ளவும் பரிந்துரைகளை அளித்திட பணியாளர் சீரமைப்புக் குழு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்காக அமைக்கப்பட்ட ஆதிசேஷய்யா குழுவின் நோக்கம் அரசுப் பணியிடங்களை குறைப்பதைத் தாண்டி, தனியார்வசம் அவற்றை ஒப்படைப்பதற்கான நடைமுறை ஏற்பாடே என்பதில் சந்தேகமில்லை.
இளைஞர்களின் எதிர்காலம்
இதை இப்போதே எதிர்க்காவிட்டால் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் குழிதோண்டி புகைப்பட்டுவிடும். எனவே, இது தொடர்பான அரசாணை 56-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வட்டத் தலைநகரங்களில் 12-ம் தேதி (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.