சந்திரயான்-2 ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
நிலாவை பற்றி ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், இஸ்ரோ தலைவர் சிவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவர்களுக்காக, அவர்கள் கடலில் இருக்கும்போது பாதுகாப்பாக இருக்க ஒரு கருவியை தயாரித்து உள்ளோம். செல்போன் ‘செயலி’யாக(ஆப்) அதை தயாரித்து உள்ளோம். மீனவர்கள் கடலில் செல்லும்போது, எந்த திசையில் சென்றால் அதிக மீன்கள் கிடைக்கும். கடலின் தன்மை எப்படி இருக்கிறது?, பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த ‘செயலி’ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இது தயாரிக்கும் நிலையில் உள்ளது. இந்த கருவி தயாரிக்கும் பணி முடிந்ததும் மீனவர்களுக்கு வழங்கப்படும். முதல்கட்டமாக தமிழக, கேரள மீனவர்களுக்கு இந்த கருவிகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பிறகு இந்த கருவியை இந்தியாவில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வழங்க அரசு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
நிலாவை பற்றி ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதம் அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். அது முடியாவிட்டால் அக்டோபர் மாதம் அனுப்பப்படும். தகவல் தொழில்நுட்பத்துக்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த மாத இறுதியில் அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதை அனுப்பியதும் உடனடியாக ஐ.ஆர்.என்.என்.எஸ். என்ற செயற்கைகோள் அனுப்பப்படும். அதுமட்டுமின்றி அதிவிரைவு தகவல் தொடர்புக்கான ஜி.சார்ட்-11 என்ற முக்கிய செயற்கைகோளை விரைவில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.