மாணவருக்கு கமிஷனர் சல்யூட்
பெங்களூரில், எதிரில் வந்த மாணவர் ஒருவர் கூறிய வணக்கத்திற்கு பதிலாக, போலீஸ் கமிஷனர், சுனீல் குமார், கையை உயர்த்தி, 'சல்யூட்' செய்த வீடியோ, சமூகதளங்களில் பரவி வருகிறது.
கர்நாடகாவில், காங்.,கைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனராக, சுனீல் குமார், கடந்தாண்டு ஆகஸ்டில் பதவியேற்றார். இந்நிலையில், பெங்களூரில், மல்லையா மருத்துவமனைக்கு சென்று விட்டு, வெளியே வந்த சுனீல் குமாருக்கு, அவ்வழியே வந்த ஒரு மாணவர், சல்யூட் அடித்தார்.
அதைப் பார்த்த சுனீல் குமார், தன் வலது கையில் இருந்த சிறு தடியை, இடக்கைக்கு மாற்றி, வலது கையால், அந்த மாணவருக்கு சல்யூட் அடித்தார். இது தொடர்பான வீடியோ, சமூக தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, இந்த வீடியோவை விரும்புவதாக, 80 ஆயிரம் பேர், 'லைக்' பட்டனை அழுத்தி உள்ளனர். 1,500 பேர், இந்த வீடியோவை தங்கள், 'பேஸ்புக்' பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த, ஒரு பேஸ்புக் பதிவர், 'சிறந்த அதிகாரி; நீங்கள், கண்ணியமான பதவியில் இருந்தபோதும், சிறுவனுக்கு சல்யூட் செய்தது, என்னை நெகிழச் செய்துள்ளது' என, கருத்து பதிவு செய்துள்ளார்.