தனியார் கல்வியியல் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறதா?- விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக புகார்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 721 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கலை, அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய பி.எட். படிப்பை 2 ஆண்டும், ஒருங்கிணைந்த எம்.எட். படிப்பை ஓராண்டும் படிக்க வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பின்னர், கலந்தாய்வு மூலம் தகுதியான மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர். அரசுக் கல்லூரிகளில் பட்டப் படிப்பு மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் 100 சதவீத இடங்கள் நிரப்பப்படும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 90 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 10 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடு அடிப்படையிலும் இடங்கள் நிரப்பப்படும்.
அரசு உதவிபெறும் சிறுபான்மைக் கல்லூரிகளில் 50 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும், 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரப்பப்படுகின்றன.
இதேபோல, தனியார் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் 90 சதவீதம் அரசு இட ஒதுக்கீடு மூலமாக நிரப்பப்படும். மீதமுள்ள 10 சதவீத இடங்கள் கல்லூரியின் நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலமாக நிரப்பப்படும். மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு கட்டாயம் சென்று படிக்க வேண்டும். செய்முறை பயிற்சிகளையும் முழுமையாக மேற்கொண்டு, 85 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும்.
பெயரளவில் செய்முறை தேர்வு
இதுமட்டுமின்றி, பி.எட். படிப்பில் முதலாம் ஆண்டில் 4 மாதங்களும், இரண்டாம் ஆண்டில் ஒரு மாதமும், முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கும் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்த விதிமுறையை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் முறையாகப் பின்பற்றி வருகின்றன. தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கழகம் பட்டம் வழங்கும். இதையொட்டி, அந்தந்த கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.
இந்த நிலையில், சில தனியார் கல்வியியல் கல்லூரிகளில், மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தாமல், தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வை பெயரளவுக்கு நடத்தி, பட்டம் பெற்றுத் தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஒரு முறை மட்டும் தேர்வு
கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கல்வியாளருமான பிரபாகரன் ‘தி இந்து'விடம் கூறியதாவது: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தனியார் கல்லூரிகளில், அந்தந்த கல்லூரிகளிலேயே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தனியார் கல்வியியல் கல்லூரிகளில் செட், நெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பிஎச்.டி. முடித்தவர்களை பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. ஆனால், சில தனியார் கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., எம்.எட். முடித்தவர்களை குறைந்த சம்பளத்துக்கு நியமிக்கின்றனர். வகுப்புகள் நடத்துவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு மட்டும் நடத்துகின்றனர். இவ்வாறு வகுப்புகள் நடத்தாமல், தேர்வு மட்டுமே நடத்தி, பட்டம் பெற்றுத்தருவது தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் விதிமுறைகளுக்கு எதிரானது.
இவ்வாறு படிப்பவர்களால், கற்றல், கற்பித்தல் பணியை முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பி.எட்., எம்.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தனிக் குழுவை அமைத்து, தனியார் கல்வியியல் கல்லூரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
நடவடிக்கைக்கு உறுதி
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் எஸ்.தங்கசாமி கூறும்போது, ‘தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வியியல் கல்லூரிகளும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பில் உள்ளன. இந்தக் கல்லூரிகளின் வளர்ச்சிகாக பல்கலை. சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் கல்வியியல் கல்லூரிகளில் வகுப்புகளை நடத்தாமல், தேர்வு மட்டும் நடத்தி பட்டம் வழங்குவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.