புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்கிறது : ஊதிய உயர்வை சமாளிக்க வாரியம் முடிவு
ஊதிய உயர்வு செலவை சமாளிப்பதற்காக, புதிய மின் இணைப்பு பெறும் போது வசூலிக்கப்படும், மீட்டர் கட்டணம், வளர்ச்சி கட்டணம் உள்ளிட்டவை உள்ளடக்கிய, பல்வகை கட்டணத்தை உயர்த்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், தாழ்வழுத்தம், உயரழுத்தம் என, இரு பிரிவு களில், மின் இணைப்பு வழங்குகிறது.அவ்வாறு புதிய மின் இணைப்பு வழங்கும் போது, நுகர்வோரிடம் பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல்வகை கட்டணத்தில், பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம் ஆகியவை அடங்கும்.அதன்படி, வீடு, கடை உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில், ஒரு முனை மின் இணைப்பிற்கான பல்வகை கட்டணம், 1,550 ரூபாய்; மும்முனை இணைப்பிற்கு, 7,450 ரூபாய் என்றளவில் உள்ளது.உயரழுத்த பிரிவில், பெரிய தொழிற்சாலைகளுக்கு பல்வகை கட்டணம், 1 கிலோவாட், 'ஆம்பியர்' திறனுக்கு, 850 ரூபாயாக உள்ளது.ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்களுக்கு, 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான அறிவிப்பை, மின் வாரியம், சமீபத்தில் வெளியிட்டது. இதனால் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 1,318 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட உள்ளது. இந்நிலையில், தற்போது, புதிய மின் இணைப்பிற்கான பல்வகை கட்டணத்தை உயர்த்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டுதோறும் சராசரியாக, 20 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. புதிய மின் இணைப்பு பெறும் போது, ஒரே முறையாக, பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பின், மின்சாரம் பயன்படுத்துவதற்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, நடைமுறையில் உள்ள பல்வகை கட்டணம், 2004ல், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டது.அதன்பின், பல ஆண்டுகளாகியும், அந்த கட்டணத்தை உயர்த்தவில்லை. தற்போது, அனைத்து வகை செலவினங்களும் அதிகரித்துள்ளன.இதனால், அதற்கேற்ப பல்வகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், அனுமதி கேட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.