தமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள்: அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் விழுப்புரம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய 5 நகரங்களில் நீட் தேர்வு மையங்களை அமைக்க சி.பி.எஸ்.இ முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வு மையங்கள் அமைக்கப்படவிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில் மட்டுமே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அளவான 107-ல் இருந்து நடப்பாண்டில் 150 ஆக உயர்த்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு சுமார் 11 லட்சம் பேர் மட்டுமே இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பேர் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்வு நகரங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான். ஆனால், தேர்வு நகரங்கள் மாநிலங்களிடையே சரியான அளவில் நிரவல் செய்யப்படவில்லை. குறிப்பாக தமிழகத்தில் தேர்வு நகரங்களுக்கு சென்றடைவதற்கு மாணவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 10 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. இவை சென்னையின் புறநகர் பகுதிகளாகவே பார்க்கப்படும். இவற்றுக்கு அடுத்தபடியாக 30 கி.மீக்கு அப்பால் திருச்சியில்தான் தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுத 174 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கோ, 188 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிக்கோ தான் செல்ல வேண்டும். அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 125 கி.மீ தூரம் பயணம் செய்து மதுரைக்கு சென்றுதான் நுழைவுத்தேர்வு எழுத முடியும். நீட் தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்வு நாளன்று காலையில் புறப்பட்டு தேர்வு மையங்களைச் சென்றடைய முடியாது.
வசதியும், வாய்ப்புகளும் உள்ளவர்கள் முதல் நாளே தேர்வு நகரத்திற்கு சென்று விடுதிகளில் தங்கி தேர்வுக்கு தயாராக முடியும். ஆனால், வசதி இல்லாதவர்களின் நிலை என்னவாகும்? கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களில் பலர் தேர்வு மையங்களுக்கு அருகில் கிடைத்த இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பெயரளவுக்கு உறங்கி விட்டுதான் தேர்வு எழுதச் சென்றனர், சரியான உறக்கமும், தெளிவான மனநிலையும் இல்லாவிட்டால், என்ன தான் சிறப்பாக படித்திருந்தாலும் அவற்றை வெளிப்படுத்த முடியாது. இது மாணவர்களின் திறனை பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
கடந்த ஆண்டு எம்.பி.,பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கு மட்டும்தான் நீட் தேர்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டில் ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடந்த ஆண்டு சுமார் 85 ஆயிரம் பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதினார்கள். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பேர் வரை நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில் தமிழகத்தில் கூடுதல் மையங்களை உருவாக்கியிருக்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 43 நகரங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும். ஆனால், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தலா 5 நகரங்களும், மராட்டியத்தில் 6 நகரங்களும் நீட் தேர்வு நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து 2 நகரங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது மிகப் பெரிய அநீதி ஆகும். இதை மத்திய இடைநிலை கல்வி வாரியம் மறுஆய்வு செய்ய வேண்டும்.
எந்தெந்த நகரங்களில் இருந்தெல்லாம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளார்களோ, அந்த நகரங்கள் அனைத்தும் தேர்வு நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார். இந்த அளவீடு தவறானது ஆகும். தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை விட, தேர்வுக்காக மாணவர்கள் பயணிக்க வேண்டிய தொலைவும், நேரமும் தான் முக்கிய அளவீடாக இருக்க வேண்டும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேர்வு மையங்களை அமைப்பது தான் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். அதற்கு உடனடியாக வாய்ப்பில்லை என்றால், இரு மாவட்டங்களுக்கு ஒரு நகரத்திலாவது நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் விழுப்புரம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய 5 நகரங்களில் நீட் தேர்வு மையங்களை அமைக்க சி.பி.எஸ்.இ முன்வர வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.