வீழ்த்திய சுனாமியில் விஸ்வரூபமெடுத்த அரசுப் பள்ளி - நாகையில் ஒரு சாதனை ஸ்கூல்!
நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஒன்று தரம் உயர்த்தப்பட்டு தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று நாகப்பட்டினம். இந்த மாவட்டத்தில்தான் உயிர்சேதமும் அதிகம், பொருட்சேதமும் அதிகம். குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமமான கீச்சாங்குப்பத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சுனாமி பேரலையால் உருக்குலைந்தன.
புதிய பள்ளிக் கட்டிடங்கள்: இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் முற்றிலுமாக தரைமட்டமானது. இந்நிலையில் 11 ஆண்டுகளில் கிராம மக்களின் முயற்சியாலும், தொண்டு நிறுவனத்தின் உதவியாலும் இந்த பகுதியில் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டன.
தரம் உயர்த்தப்பட்ட கல்வி: எனினும், தொடக்கத்தில் இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டினர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக பள்ளி நிர்வாகமும், கிராம பள்ளிக் குழுவும் இணைந்து இப்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கல்வியை வழங்க முடிவு செய்தது.
ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்: அதன் அடிப்படையில், தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த அரசு பள்ளி "ஸ்மார்ட் கிளாஸ்" பள்ளியாக மாற்றப்பட்டது. தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 100 சதவீத இணையதள வசதியுடன் பள்ளி முற்றிலும் கணினி மயாக்கப்பட்டது.
முன்மாதிரி பள்ளி: தனியார் பள்ளிகளைவிட மாணவர்களுக்கு தரம் உயர்ந்த கல்வியை வழங்கி வரும் இந்த அரசுப் பள்ளி, தற்போது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முன் மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.