கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத திணிப்பு இல்லை
மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயாவின் காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில், மாணவர்களுக்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை' என, மனிதவள மேம்பாட்டுத் துறை விளக்கம் அளித்துள்ளது.நாடு முழுவதும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில், 1,125 கேந்திரிய வித்யாலாயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, காலை பிரார்த்தனையின் போது, ஹிந்து மத நடைமுறைகளை, மாணவர்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக திணிப்பதாக, லோக்சபாவில் நேற்று, கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த, மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், உபேந்திரா குஷ்வாஹா கூறியதாவது:கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில், காலை நேர பிரார்த்தனை கூட்டத்தின் போது, மாணவர்கள் கட்டாயம் கண்களை மூடி, கைகளை குவித்து, பிரார்த்தனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக எழும் குற்றச்சாட்டு தவறானது; இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம், அரசிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.