ஆசிரியர், மாணவர் ‘லட்சுமண ரேகை‘யை தாண்டக்கூடாது: சட்ட மாணவர்களை கல்லூரியிலிருந்து நீக்கிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர்கள், மாணவர்களின் கடமைகள், பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதில் இருதரப்பினரும் லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சி சட்டக் கல்லூரி மாணவி கள் விடுதியில் செல்போன் சோதனை நடத்தப்பட்டது. இதனால், விடுதி வார்டனான, உதவி பேராசிரியையைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, உதவி பேராசிரியையின் செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச மற்றும் மிரட்டல் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. அவரது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டது.
இதுதொடர்பாக அவர் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2014-ல் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சில மாணவர்களைக் கைது செய்தனர்.
இதுதொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் திருமணி, சரவணபவா, பழனிச்சாமி, சிவகுரு ஆகியோரை கல்லூரியில் இருந்து நீக்கி 2015-ல் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.
மாணவர்கள் மனு தள்ளுபடி
இந்த உத்தரவை ரத்து செய்து தங்களைக் கல்லூரியில் சேர்க்கக் கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி 2015-ல் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து திருமணி, சரவணபவா ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவும் தள்ளுபடியானது.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் கல்லூரியில் சேர்க்க உத்தரவிடக் கோரி பழனிச்சாமி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அனைத்து நிலைகளிலும் மாணவரை நெறிப்படுத்துவதில் கல்வி முக்கிய பங்காற்றுகிறது. சில மாணவர்கள் கெட்ட நடத்தையால் தங்களையும், பிற மாணவர்களையும் காயப்படுத்தி, கல்வித் துறையையும் காயப்படுத்துகின்றனர்.
ஆசிரியர்-மாணவர் உறவு பலவிதங்களிலும் தனித்துவம்மிக்கது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கும் நம்பிக்கைக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உயரிய கல்வியைப் பரிசாக வழங்குகின்றனர்.
கடமை, பொறுப்புகள்
ஆசிரியர்கள், மாணவர்களின் கடமைகள், பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இருதரப்பும் லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது என எதிர்பார்க்கிறோம். முன்பு கல்லூரிகளில் சிறிய அளவு தவறு செய்தாலும் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.
தற்போது கல்லூரிகளில் ஏராளமான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி தவறிழைக்கும்போது பொறுத்துக்கொள்ள முடியாது.
நமது நாட்டில் அனைத்து மதங்களிலும் பெண்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மனுதாரர் தனது ஆசிரியையை மரியாதை குறைவாக நடத்தவில்லை, பெண்மையை மரியாதைக் குறைவாக நடத்தியுள்ளார்.
கெட்ட நடத்தைக் கொண்ட மாணவரைக் காட்டிலும் பெண்மைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிடுவதற்கு முகாந்திரம் இல்லை.
பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட பிறகே மனுதாரர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.