சென்னைப் பல்கலை.யில் மாயமானவை சர்ச்சைக்குரிய விடைத் தாள்கள்!
சென்னைப் பல்கலைக் கழகத்தில் இப்போது காணாமல் போன மாணவர்களின் விடைத் தாள்கள் அனைத்தும், சர்ச்சைக்குரிய விடைத் தாள்கள் என்பது தெரியவந்துள்ளது. தேர்வு முறைகேட்டில் சிக்கிய மாணவர்களைக் காப்பாற்ற திட்டமிட்டு இச்சம்பவம் அரங்கேற்றியிருப்பதாக பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.
யுஜிசி (பல்கலைக் கழக மானியக் குழு) உத்தரவின் அடிப்படையில், ஆந்திரம், கேரளம், மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இயங்கி வந்த தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் 30-க்கும் மேற்பட்ட கல்வி மையங்களை சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த 2016 ஆம் ஆண்டு படிப்படியாக மூடியது.
அவ்வாறு கல்வி மையங்களை மூடும்போது, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இயங்கி வந்த சில கல்வி மையங்களில் தேர்வு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை பல்கலைக் கழகம் கண்டறிந்தது. தமிழக மாணவர்கள் சிலர், தேர்வில் காப்பியடிப்பதற்காக இங்கிருந்து மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதியது தெரியவந்தது.
இதுபோல முறைகேட்டில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைத்த பல்கலைக் கழகம், அந்த மாணவர்களிடம் விசாரணையையும் மேற்கொண்டது. விசாரணையில் உரிய விளக்கம் அளித்த மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகளை பல்கலைக் கழகம் வெளியிட்டது. பிற மாணவர்களின் மீது நடவடிக்கை எடுத்தது. இந்த மாணவர்களின் விடைத் தாள்கள் அனைத்தும் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஓர் அறையில் பெட்டியில் வைத்து பூட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
மாயமான விடைத் தாள்கள்: இந்தச் சூழலில், சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி நிறுவன எம்பிஏ மாணவர்களின் விடைத் தாள்கள் மாயமானதாக கடந்த வெள்ளிக்கிழமை பெரும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த பல்கலைக் கழக துணைவேந்தர் துரைசாமி, விடைத் தாள்கள் மாயமானதாகக் கூறப்படும் தகவல் குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அத்துடன், உண்மையில் காணாமல் போன விடைத்தாள்கள் எவை என்பது குறித்து அறிவதற்காக விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவும் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய விடைத் தாள்கள்: இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் இப்போது காணாமல் போயிருக்கும் விடைத் தாள்கள் அனைத்தும், மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இயங்கி வந்த சென்னைப் பல்கலைக் கழக கல்வி மையங்களில் தேர்வெழுதி முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் விடைத் தாள்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக் கழக மூத்த பேராசிரியர் ஒருவர் கூறியது:
இந்த முறைகேடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். எனவே, இதற்குக் காரணமானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.