விவசாயிகளுக்காக, உழவன் : வருகிறது, மொபைல் ஆப்
வேளாண் துறை தொடர்பான பல்வேறு தகவல்களை, விவசாயிகள் தெரிந்து கொள்ள வசதியாக, பிரத்யேக, 'மொபைல் ஆப்' விரைவில், செயல்பாட்டிற்கு வருகிறது.தமிழக விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, சாகுபடிக்கு தேவையான, பல்வேறு உதவி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இந்த விபரங்கள், விவசாயிகளுக்கு குறித்த நேரத்திலும், முறையாகவும் சென்றடைவதில்லை. அதனால், அரசின் திட்டங்களை பெற முடியாமல், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது, மொபைல்போன் பயன்பாடு, விவசாயிகள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி, விவசாயிகள் வசதிக்காக வேளாண்துறை சார்பில், 'உழவன்' என்ற, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை, விவசாயிகள், தங்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தால், வேளாண் துறை சார்ந்த மத்திய, மாநில அரசின் உதவி திட்டங்களை அறிந்து, பயன்பெற முடியும்.தற்போது, பல மாவட்டங்களில், சோதனை அடிப்படையில், 'மொபைல் ஆப்' சேவை நடைமுறையில் உள்ளது. இந்த சேவை, விரைவில், தமிழகம் முழுவதும் செயல்பாட்டிற்கு வர உள்ளது. சேவையை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பார் என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.