80 சதவீத வங்கி கணக்கு ஆதாருடன் இணைப்பு
நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளில், 80 சதவீதமும், மொபைல் போன் இணைப்புகளில், 60 சதவீதமும், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக, ஆதார் அடையாள எண் வழங்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
வங்கி கணக்கு,ஆதார்,இணைப்பு 'ஆதார் எண் பெற்ற அனைவரும், தங்கள் வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் போன் எண்களை, மார்ச், 31க்குள் ஆதாருடன் இணைக்க வேண்டும்' என, ஆதார் அடையாள எண் வழங்கும் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, நாடு முழுவதும், இந்த பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இது குறித்து, ஆதார் அடையாள எண் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷன் பாண்டே, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இதுவரை, 120 கோடி பேருக்கு, ஆதார் வழங்கப்பட்டு உள்ளது. நாட்டில் மொத்தமுள்ள, 109 கோடி வங்கிக் கணக்குகளில், 87 கோடி வங்கிக் கணக்குகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன.இதில், 58 கோடி வங்கிக் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு விட்டன; மற்ற வங்கிக் கணக்குகளை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.
மேலும், நாட்டில் மொத்தம், 142 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன. இவற்றில், 85.7 கோடி இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. மார்ச், 31க்குள், அனைத்து எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம், 80 சதவீத வங்கிக் கணக்குகளும், 60 சதவீத மொபைல் இணைப்புகளும், ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.