தேர்வு மைய முறைகேடுகள்: தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரியில் சுமார் 9 லட்சத்து 7,620 மாணவ, மாணவிகள் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காலை 9 மணிக்குச் சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கினார். 'பொதுத்தேர்வை முழு ஈடுபாட்டுடன் எதிர்கொள்ள வேண்டும்; கேள்விகளைக் கண்டு பதற்றம் அடையாமல் யோசித்து பதில் எழுத வேண்டும்.
அனைத்து பாடங்களுக்கும் முன் தயாரிப்பு பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும்' என்பன உள்ளிட்ட சில அறிவுரைகளைக் கூறினார். இதையடுத்து தேர்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள், கண்காணிப்பாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது: தேர்வு மையங்களில் கண்காணிப்பு, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் பலத்த பாதுகாப்பு என தேர்வு தொடர்பான முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்து புகார் வந்தால் அரசு அதை உடனடியாகப் பரிசீலித்து குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் தொடர்புடைய பள்ளிக்கு தேர்வு மைய அனுமதி ரத்து செய்யப்படுவது நடமுறையாக உள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லும்போது சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால்தான் மீண்டும் அனுமதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவிக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டே அரசின் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அதுபோன்ற தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தமிழ் முதல் தாள் எளிமை
பிளஸ் 2 தமிழ் முதல்தாள் வினாத்தாள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பி.புனிதா, டி.ஹேமலதா, ஆர்.சித்திக் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கூறியது: தமிழ் முதல் தாள் செய்யுள், இலக்கணம் ஆகிய இரு பிரிவுகள் தொடர்பாக 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில், 50 மதிப்பெண்களுக்கு மேல் ஒன்று, இரண்டு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு மதிப்பெண் பகுதியில் கவிக்கோ அப்துல்ரகுமான் பெற்ற விருது எது? என்பது உள்ளிட்ட அத்தனை கேள்விகளும் எளிமையாக இருந்தன.
காலாண்டு, அரையாண்டு வினாத்தாள்களைக் காட்டிலும் இந்த பொதுத்தேர்வு வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது என்றனர்.