மாணவியருக்கு உதவிய போலீசுக்கு பாராட்டு
தெலுங்கானாவில், பஸ் பழுதானதால், பொதுத் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவியரை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்று, தேர்வெழுத உதவிய, இன்ஸ்பெக்டரின் செயலுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
'பிரேக் டவுன்' : தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர், சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. செகந்திராபாதில் உள்ள பள்ளியில், தேர்வு எழுதுவதற்காக, பள்ளி மாணவியர் சிலர், மாநகர பஸ்சில் சென்றனர். பஸ் திடீரென, 'பிரேக் டவுன்' ஆனதால், மாணவியர் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். அவர்களில் சிலர், ஆட்டோ பிடித்து தேர்வெழுதச் சென்றனர். எட்டு மாணவியர் மட்டும், வேறு வழியின்றி, சாலையோரத்தில் நின்றபடி இருந்தனர்.அப்போது, அந்த வழியே போலீஸ் வாகனத்தில் சென்ற, இன்ஸ்பெக்டர், சீனிவாசலு, மாணவியர் நிற்பதை பார்த்து வாகனத்தை நிறுத்தினார். மாணவியரிடம், அவர்கள் நிற்பதற்கான காரணத்தை கேட்ட அவர், உடனடியாக, தன் வாகனத்தில் ஏறும்படி கூறினார். போலீஸ் வாகனம் என்பதால், மாணவியர் சிலர் தயங்கினர்.
கோரிக்கை : எனினும், பக்குவமாக பேசி, பயத்தை போக்கி, அவர்களை வாகனத்தில் ஏற செய்தார். அங்கிருந்து, தேர்வு நடக்கும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். எனினும், அவர்கள் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே தேர்வு துவங்கியதால், மாணவியர் கலக்கம் அடைந்தனர். அவர்களுடன், தேர்வு அறை வரை சென்ற இன்ஸ்பெக்டர், சீனிவாலு, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் நிலைமையை எடுத்துரைத்து, மாணவியரை தேர்வெழுத அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மாணவியர் அனைவரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவலை, சம்பந்தப்பட்ட மாணவியரே, 'பேஸ்புக்'கில் பகிர்ந்ததோடு, இன்ஸ்பெக்டருக்கு நன்றியும் தெரிவித்து உள்ளனர். இன்ஸ்பெக்டரின் இந்த செயல், பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.