4ஜி சேவைக்கு 200 கோபுரங்கள்
தமிழக வாடிக்கையாளர்களுக்கு, '4ஜி' மொபைல் போன் தொழில்நுட்ப சேவையை அறிமுகம் செய்யவுள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அதற்காக, ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த இடங்களை தேர்வு செய்துள்ளது.
இது தொடர்பாக, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்திற்கு மாறுவது, அவசியமாகிறது. பொதுவாக, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், சாதாரண ரக, மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால், 'இன்டர்நெட்' பயன்பாட்டுக்குத் தேவைப்படும், '3ஜி, 4ஜி' தொழில்நுட்ப அடிப்படையிலான, தொலைத்தொடர்பு கோபுரங்களை, அதிகம் நிறுவுவதில்லை. எனினும், வாடிக்கையாளர்கள், 'ஸ்மார்ட் போன்' பயன்பாட்டுக்கு மாறி வருவதால், '3ஜி' கோபுரங்களை, அதிக அளவில் நிறுவினோம். அடுத்தகட்டமாக, வாடிக்கையாளர்களுக்கு, வேகமான இன்டர்நெட் சேவை வழங்குவதற்காக, முதல் முறையாக, '4ஜி' தொழில்நுட்ப கோபுரங்கள் நிறுவப்படவுள்ளன.முதல் கட்டமாக, சென்னையில், 200 இடங்களில், அவை அமைக்கப்படும். அவை, ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த, ராஜிவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில், விரைவில் நிறுவப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.