மாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
எந்தக் காரணத்தைக் கூறியும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான, மாணவர் அனுமதி சீட்டை தராமல் பள்ளிகள் இழுத்தடிப்பு செய்யக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை பள்ளிக் கல்வி வாரியம் எச்சரித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 5ல் துவங்க உள்ளன. இந்தத் தேர்வில் பங்கேற்கும் தகுதியுடைய மாணவர்கள் பட்டியலை பள்ளிகள் அளித்து, அதன்படி, தேர்வு எழுதுவதற்கான மாணவர் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி நடத்திய தேர்வில் தேர்ச்சி பெறாதது, குறைந்த மதிப்பெண் போன்ற காரணங்களைக் காட்டி, மாணவர்களுக்கு அனுமதி சீட்டை தராமல், பள்ளிகள் இழுத்தடிப்பு செய்வதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் சில பள்ளிகள், அனுமதி சீட்டு வழங்க கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது, சட்டவிரோதமான நடவடிக்கை. எந்தக் காரணத்தையும் கூறி, மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் இருக்கக் கூடாது. மாணவர்களின் அனுமதி சீட்டை, பள்ளிகள் வைத்துக்கொள்ளக் கூடாது; மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.