மாணவர்கள் தாய்மொழியில் படித்துவிட்டு பிற மொழிகளையும் கற்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
சவீதா நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சவீதா நிகர் நிலைப்பல்கலைக்கழக வேந்தர் வீரையன் தலைமை தாங்கினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மருத்துவம், பல்மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 1,361 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கே.சிவன், இந்திய பல் மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் திபையந்து மசூம்தர், விஞ்ஞான ஆலோசகர் ஜி.சதீஷ் ரெட்டி, கே.சி.பி.குழும நிர்வாக இயக்குனர் வி.எல்.இந்திரா தத் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வெங்கையா நாயுடு வழங்கினார்.
பிறகு வெங்கையா நாயுடு பட்டமளிப்பு விழா உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்கள் தமிழகத்தில் இருந்து மட்டும் அல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் படித்து பட்டம் பெற்று இருக்கிறார்கள். பட்டம் பெறும் அவர்களுக்கு வாழ்க்கையில் இன்று (நேற்று) முக்கியமான தினம். பட்டம் பெறும் டாக்டர்கள் 2 ஆண்டுகள் கிராமங்களில் பணியாற்றவேண்டும். கிராமங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் முக்கியத்துவம் அளிக்கிறது.
பட்டம் பெறும் மாணவ- மாணவிகளில் சிலர் வெளிநாட்டில் பணிபுரிய செல்வார்கள். அவர்கள் அப்படி செல்லக்கூடாது என்பது என்னுடைய கருத்து. வெளிநாட்டுக்கு செல்லுங்கள், நிறைய சம்பாதியுங்கள் பின்னர் இந்தியா வந்துவிடுங்கள். மாணவர்கள் தாய்-தந்தையர், குருவாக நினைக்கும் ஆசிரியர்கள், பிறந்த ஊர், பிறந்த மாநிலம், பிறந்த நாடு ஆகிய 5 பண்புகளை மறக்கக்கூடாது.
தாய்மொழிதான் சிறந்தது. தாய்மொழி தான் நன்றாக புரியும். தாய் மொழியில் நன்றாக படித்துவிட்டு பிறமொழிகளையும் கற்கவேண்டும். எந்த மாநிலமாக இருந்தாலும் மாணவர்களாகிய நீங்கள் தாய் மொழியில் படியுங்கள். பின்னர் தேவைப்பட்டால் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளை கற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்தியை திணிக்கவில்லை. கட்டாயப்படுத்தவில்லை.
‘தாய் மொழியில் பேசுவதே பெருமை’ என்று தினத்தந்தியில் நேற்று முன்தினம் எனது கட்டுரை பிரசுரமாகி உள்ளது. மாணவர்களே வேலைவாய்ப்பை மட்டும் பெற்றால் போதாது. பிறருக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்யுங்கள். சமுதாயத்திற்கு உதவி செய்யும் மனப்பான்மை வளரவேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
அவர் பேசத்தொடங்கும்போது தமிழில் பேசினார். தமிழும், தமிழ்நாடும் எனக்கு நெருக்கம். பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறினார். பிறர் தமிழில் பேசினால் நான் புரிந்து கொள்வேன். தமிழ் மிகவும் சிறந்த மொழி. மிகப்பழமையானது. ஆனால் தொடர்ந்து தமிழில் பேசத்தெரியாது என்று அவர் கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சவீதா பல்கலைக்கழக இணைவேந்தர் சவீதா ராஜேஷ், இயக்குனர் தீபக் நல்லுசாமி, பதிவாளர் டாக்டர் வி.தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் துணைவேந்தர் ஜவகர்நேசன் ஆண்டறிக்கை படித்தார்.