‘ஜி சாட்– 11’ செயற்கை கோள் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
அதிவேக இன்டர் நெட் வசதிக்காக வருகிற ஏப்ரல் மாதம் ‘ஜி சாட் – 11’ செயற்கை கோள் விண்ணல் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் 21-02-2018 அன்று விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் சிவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் ‘ஜி சாட் –11’ என்ற செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோளின் மூலம் இன்டர்நெட் வசதி அதிவேகத்தில் கிராமப்புறங்கள் உள்பட எல்லா பகுதிகளுக்கும் கிடைக்கும்.
இந்த செயற்கை கோளானது தென்அமெரிக்காவின் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதன் எடை 5.7 டன். இவ்வளவு எடை கொண்ட செயற்கை கோளை அனுப்பும் ராக்கெட் வசதி நமது நாட்டில் இல்லை என்பதால் பிரஞ்சு கயானாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து அனுப்பப்பட இருக்கிறது.
மேலும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் ‘ஜி.எஸ்.எல்.வி. ஜி. சாட் 6–ஏ’ என்ற செயற்கை கோளும் ஏவப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு வாரத்தில் ‘ஐ.ஆர். 1 ஐ‘ என்ற செயற்கை கோள் அனுப்பப்பட உள்ளது.
செயற்கை கோள்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்கச் செய்ய எலெக்ட்ரிக்கல் புரோபசல் என்ற நவீன திட்டம் கையாளப்பட இருக்கிறது. செற்கை கோள் அளவில் பெரியதாக இருந்தால் அதன் ஆயுள் அதிகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும். இஸ்ரோவின் 158 திட்டங்களில் 126 திட்டங்கள் செயல் வடிவம் பெற்று நல்ல நிலையில் உள்ளது.
சில செயற்கை கோள்களை தயாரிக்கும் பணியை இஸ்ரோ தனியாரிடம் வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் அவற்றை தயாரிப்பதால் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசு பள்ளியில் படித்தால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என்ற தாழ்வுமனப்பான்மையை மாணவர்கள் விடவேண்டும்.
அரசு பள்ளியில் படித்தாலும் அரசு கல்லூரியில் படித்தாலும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படித்தாலும் எல்லாம் ஒன்று தான். நம்மால் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் மட்டும் இருந்தால் போதும். மாணவர்கள் நிச்சயமாக வெற்றி அடையலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒகி புயலின் போது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மீனவர்களுக்கு பயன்படும் வகையில் புதிய செல்போன் செயலி ஒன்றை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். கடலுக்கு செல்லும் மீனவர்கள் செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு சென்றால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? எங்கு அதிகமான மீன்கள் இருக்கிறது? கடலின் தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடியும். விரைவில் இந்த செயலி வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.