தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.55% ஆக குறைப்பு
2017-18ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.55 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் இந்த வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் அறங்காவலர்கள் கூட்டம், அதன் தலைவரும், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சந்தோஷ் கங்வார் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்த வட்டி குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 6 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்களின் நிதி செலுத்தப்பட்டு வருகிறது.
வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்ட சந்தோஷ் கங்வார் கூறுகையில், 'இப்போது கடினமான பொருளாதார சூழலில் எதிர்காலம் குறித்து மதிப்பிடுவது சிரமமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி வழங்கினோம். அப்போது ரூ.695 கோடி உபரியாக இருந்தது. இந்த நிதியாண்டில் 8.55 சதவீத வட்டி வழங்க பரிந்துரைத்துள்ளோம். இதனால் ரூ.586 கோடி உபரி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதத்தை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டில் வட்டியை அளிப்பதற்காக பங்கு பரிவர்த்தனை வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்த நிதியில் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றார் அவர்.
அடுத்த கட்டமாக இந்த பரிந்துரைக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகு தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் வட்டித் தொகை செலுத்தப்படும்.